இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-08-02 19:15 GMT

பரங்கிப்பேட்டை, 

வெளிநாட்டில் வேலை

பெண்ணாடம் அருகே உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மகள் பவானி (வயது 22). இவருக்கும் பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஹரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பரதன்(25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. பரதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் பவானி வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய மாமியார் சுமதி, வீட்டில் எந்த வேலையும் செய்யவில்லை என்று திட்டியதாக தெரிகிறது. மேலும் பவானி இதுகுறித்து தனது கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சாவில் சந்தேகம்

இதுபற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவானியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானியின் தாய் வள்ளி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பவானியை அவரது மாமனார், மாமியார், உறவினர்கள் அடித்துக்கொலை செய்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-கலெக்டா் விசாரணை

இதேபோல் சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமனிடமும் வள்ளி புகார் மனு அளித்துள்ளார். மேலும் பவானிக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால், வரதட்சணை கொடுமையால் பவானி இறந்தாரா? என சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்