பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதிர்வு தொகை
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-க்கான வைப்புத்தொகை ரசீது பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த நிலையில் முதிர்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம். வைப்புத்தொகை ரசீது பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட அசல் வைப்புத்தொகை ரசீது, குழந்தைகளின் வங்கி கணக்குபுத்தகம், குழந்தையின் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், தாய் மற்றும் குழந்தையின் பாஸ்போர்ட் அளவு படம் ஆகிய ஆவணங்களை நெல்லை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் விவரங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் அந்த நிதி நிறுவனம் மூலம் தங்களின் குழந்தை வங்கி கணக்கில் முதிர்வு தொகை வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னாள் படை வீரர்கள்
இதேபோல் கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பிரசார கூட்டம் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவரை சார்ந்தவர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சுய தொழில் வேலை வாய்ப்பு கருத்தரங்கில் பங்கு பெற கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.