ராட்சத 'பேஷன் புரூட்' பழங்கள்
கொடைக்கானலில் விளையும் ராட்சத ‘பேஷன் புரூட்’ பழங்களை பார்த்து கிராம மக்கள் வியந்தனர்.;
'பேஷன் புரூட்' பழ சாகுபடி
கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் 'பேஷன் புரூட்' பழ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 'பேஷன் புரூட்' என்பது பாசிப்ளோரா குடும்பத்தை சேர்ந்த பழ வகை ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் பாசிப்ளோரா எடுலிஸ். இது பிரேசில் நாட்டை தாயகமாக கொண்டது. இந்தியாவில் இமாச்சலபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'பேஷன் புரூட்' பழங்கள் அதிக அளவில் விளைகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இதன் காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் மஞ்சள் நிறத்திலும் காட்சி அளிக்கும்.
இந்த பழங்கள் முட்டை வடிவில் இருக்கும். அதிக குளிரும், வெப்பமும் உள்ள பகுதிகளில் 'பேஷன் புரூட்' நன்கு வளரும் தன்மை கொண்டது. தமிழில் 'சேர்பட்' என்றும், ஆங்கிலத்தில் 'பேஷன் புரூட்' என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக 100 கிராம் எடையில் தான் பேஷன் புரூட் பழங்கள் இருக்கும்.
ஒரு பழம் 3 கிலோ
இந்தநிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மச்சூர் கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில், ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பேஷன்புரூட் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட இந்த நாற்றுகள், தற்போது வளர்ந்து மகசூல் கொடுக்க தொடங்கி விட்டது. ஆனால் அந்த பழங்களின் எடை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு பழம், 3 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது.
ஆச்சரியம் அடையும் வகையில், காட்சி அளிக்கும் ராட்சத பழங்களை மலைக்கிராம மக்கள் வியப்புடன் ரசித்து செல்கின்றனர். வழக்கமான பேஷன் புரூட் பழங்களை போலவே இந்த பழங்களின் சுவை இருப்பதாகவும், பல்வேறு நோய்களை தீர்க்கக்கூடிய பழமாகவும் இவை உள்ளது என்று தனியார் எஸ்டேட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.