ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
தனித்தன்மையான காரத்தால் சிறப்பு பெற்ற ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் அந்த மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தனித்தன்மையான காரத்தால் சிறப்பு பெற்ற ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் அந்த மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புவிசார் குறியீடு
இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அந்த பொருளின் பிறப்பிடத்தை அறியவும் இந்த குறியீடு உதவும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலியாகவோ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும். ஏற்கனவே காஞ்சீபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மதுரை மல்லிைக, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்ேகாவா போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
முண்டு மிளகாய்
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் முண்டு மிளகாய் எனப்படும் குண்டு மிளகாய்க்கு தனிச்சிறப்பு உண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில், வறட்சியை தாங்கி வளரும் இந்த முண்டு மிளகாயின் தனித்தன்மையே அதன் காரம்தான். இங்கிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு முண்டு மிளகாய் ஏற்றுமதியாகி வருகிறது. உலக அளவில் சந்தை வாய்ப்பும் உள்ளது. தனிச்சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் விண்ணப்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளதை கண்டறிந்து, அதற்கு புவிசார் குறியீடு அளிக்க நறுமண பொருட்கள் வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தநிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்துறை) தனுஷ்கோடி மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாகராஜன் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் விளையும் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது. பொதுவாக புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து, 4 மாத காலத்திற்குள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிடும். அந்த வகையில் கடந்த 21-ந் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துவிட்டது. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே, புவிசார் குறியீடு கிடைத்துவிடும் என்பதால் தகவல் வெளியாகி உள்ளது. உறுதியான தகவல் விரைவில் வந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது விவசாயிகள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் முண்டு மிளகாய் சாகுபடி பரப்பு இன்னும் அதிகமாகும் என்றும், வெளியூர், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.