பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை
பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.;
காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர் பூந்தமல்லியை சேர்ந்த திருக்கச்சி நம்பிகள். பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜருக்கு குருவான பரம பாகவதரான திருக்கச்சி நம்பிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மூன்று கருட சேவை நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்து கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நிறைவாக கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் தான் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.