போடிப்பட்டி
கொழுமம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கொசு உற்பத்தி
பொதுவாக மழைக்காலம் என்பது நோய்கள் அதிக அளவில் பரவும் ஒரு காலமாகவே உள்ளது. எனவே பருவமழை காலங்களில் சுத்தமான குடிநீர் வழங்குதல், குப்பைகள் தேங்காமல் பாதுகாத்தல், கழிவு நீர்க் கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதுதவிர திறந்தவெளி கழிப்பிடங்கள் உருவாகாமல் பாதுகாப்பதும் நோய் பரவலை தடுப்பதில் முக்கிய அம்சமாக உள்ளது.இந்தநிலையில் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாமல் குப்பையோடு குப்பையாக கிடக்கிறது. இதனால் வீதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது.
உணவுக் கழிவுகள், பாலித்தீன் கழிவுகள் உள்ளிட்ட பலவிதமான கழிவுகள் குப்பைகளில் கொட்டப்படுவதால் அவை மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.குப்பையில் உணவு தேடும் நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்ப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.குமரலிங்கத்திலிருந்து பழனி செல்லும் முக்கிய சாலைக்கு அருகில் மின் கம்பங்களைச் சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாரிய ஊழியர்கள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுவதுடன், யாரேனும் விஷமிகள் குப்பைகளில் தீ வைத்தால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை
மேலும் இந்த பகுதிக்கு அருகில் வழிபாட்டுத்தலம், அஞ்சலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பகுதிக்கு மிக அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க குப்பைகளை உரிய முறையில் அப்புறப்படுத்தவும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.