கஞ்சா கடத்தியவருக்கு 6 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பிச்சைநகர் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது, காரை நிறுத்தாமல் போலீஸ் ஏட்டு சரவணன் மீது மோதிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் காரை விரட்டிப்பிடித்து சோதனை செய்த போது, காரில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் காரை ஓட்டிவந்த புதுக்கோட்டை இறைவன் நகரை சேர்ந்த முகமதுஹனிபா (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஏ.கே.பாபுலால், குற்றம்சாட்டப்பட்ட முகமதுஹனிபாவுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் எம்.செந்தில்குமார் ஆஜர் ஆனார். சிறப்பாக பணியாற்றி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த காந்திமார்க்கெட் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.