கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் கைது
கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
கொள்ளிடம் டோல்கேட், ஜூலை.20-
திருவானைக்காவல், தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் திருச்சி நெ.1டோல்கேட் அருகே ஒய் ரோடு என்ற இடத்தில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் தான்
அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் என்று சொல்லி பணியில் இருந்த பெண் தலைமை காவலர் உள்பட போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதில் பணியில் இருந்த போதராஜ் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார். இதனை கண்ட பொதுமக்கள் போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்ட அருண்குமார் தனது ஆடைகளை அகற்றி அரை நிர்வாணத்துடன் நின்று நான் தற்கொலை செய்துகொண்டு உங்கள் வேலையை காலி செய்வேன் பாருங்கள் என்று மிரட்டினார். இதனையடுத்து போலீசார் அருண்குமாரின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று காலை போலீசார் அருண்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து அருண்குமார் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், போலீசாரின் சீருடையை கிழித்து அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய வழக்கு உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.