3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
ஆறுமுகநேரி பேயன்விளையை சேர்ந்தவர் வல்லாள மகாராஜன். இவருடைய மகன் சுடலைமுத்து (வயது 34). இவர் நல்லூர் பகுதியில் நின்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல், சுடலைமுத்தை அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த முத்துசெல்வம் மகன் சாரதி (21), மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (21), காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் திருமூர்த்தி (26) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சாரதி, மரிய யோஸ்வின், திருமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.