அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-14 19:00 GMT

தென்காசி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விநாயகர் சிலைகள்

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டது பிளாஸ்டர் ஆப் வாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான சிலைகளை நீர்நிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மரக்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்க படாது.

செயற்கை சாயம்

நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகளின் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணை வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.

மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மக்கக் கூடிய நச்சுக்கலப்பற்ற இயற்கை காயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ண பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயத்தால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்படும் இடங்கள்

அதன்படி தென்காசி மாவட்டத்தில் கடையம் ராமநதி அணை, ஆழ்வார்குறிச்சி கடனா ஆறு, தென்காசி யானை பாதம் அருகில் சிற்றாறு, இலஞ்சி சிற்றாறு, செங்கோட்டை குண்டாறு அணை, புளியரை ஹரிஹரா ஆறு, கரிசல்குடியிருப்பு அனுமன் நதி, பாவூர்சத்திரம் குளம், கடையநல்லூர் தாமரைக்குளம், கடையநல்லூர் கருப்பா நதி அணை, வாசுதேவநல்லூர் நெற்கட்டும் செவல் சிமெண்ட் தொட்டி, வாசுதேவநல்லூர் ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். எனவே சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்