பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஆரணி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-22 11:39 GMT

ஆரணி

ஆரணி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஆரணி அண்ணா சிலை அருகே அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றிணைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். ஊர்வலத்தை நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இன்னிசை நிகழ்ச்சி

ஊர்வலத்துடன் சாரட் குதிரை வண்டியில் பாரதமாதா வேடம் அலங்காரம் கொண்ட பெண் விநாயகர் சிலைகளுடன் நின்று வந்தார். தொடர்ந்து நாடக கலைஞர்கள் சிவன், பார்வதி, விநாயகர், முருகர், பெருமாள், கிருஷ்ணர் என பல்வேறு வேடமிட்டும் வந்தனர்.

அதனைத்தொடர்ந்து கெண்டை மேளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, சிலம்பாட்டம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியுடன் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலம் ஆரணி காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, வடக்கு மாடவீதி, பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, ராமகிருஷ்ணா பேட்டை வழியாக பையூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பாறை குளத்துக்கு ெசன்றது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக ஊர்வலம் செல்லும் பாதையை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் தலைமையில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்