திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆறு, வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-20 19:48 GMT

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆறு, வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

கல்லக்குடி

கல்லக்குடி போலீஸ் சரகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 38 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் அந்தந்த ஊர்களில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதேபோல் காணக்கிளியநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அந்த கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் விநாயகர் குழு நண்பர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் தேரோடும் வீதிகள் மற்றும் அனைத்து தெருக்கள் வழியாக செண்டை மேளம் முழங்க மின்னொளி ரதத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மணிகண்டம்

மணிகண்டம் போலீஸ் சரகம் நாகமங்கலம், அளுந்தூர், மேக்குடி, மணிகண்டம், சிலம்புடையான்பட்டி, வேலப்புடையான்பட்டி, எரங்குடி உள்ளிட்ட 17 இடங்களில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து நேற்று எரங்குடியை தவிர்த்து மற்ற 16 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்தனர். இதில் அளுந்தூரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை காவிரி ஆற்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. மற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

தா.பேட்டை

தா.பேட்டை, மேட்டுப்பாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, சுண்டல், பொரிகடலை வைத்து படையலிட்டு வழிபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பக்தர்கள் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். பின்னர் சிலைகளை வாகனங்களில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முசிறி கொக்கு வெட்டியான் கோவில் பகுதி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

முசிறி

முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 75 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவைகள் அந்தஇந்த பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பரிசல் துறை ரோடு காவிரி ஆறு, கொக்கு வெட்டியான் கோவில் காவிரி ஆறு, உமையாள்புரம் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டது. முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூரில் 34 விநாயகர் சிலைகளும், துவாக்குடியில் 26 சிலைகளும், நவல்பட்டில் 6 சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று திருவெறும்பூரில் இருந்து 9சிலைகளும், நவல்பட்டிலிருந்து 5 சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவெறும்பூர் அருகே வேங்கூர் பூசத்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

மீதம் உள்ள 52 சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேங்கூர் பூசைத்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

மணப்பாறை

மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், வளநாடு, துவரங்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் குளத்தில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சிலைகள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட குளங்கள், பொன்னணியாறு உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மண்ணச்சநல்லூர்

* மண்ணச்சநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கடைவீதி, அத்தாணி, நொச்சியம் வழியாக ஊர்வலமாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன.

இதே போல் சமயபுரம், சிறுகனூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்