செஞ்சியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
செஞ்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
செஞ்சி,
சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தப்பட்டு, 3 அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
அந்த வகையில் செஞ்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 125-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து 3-ம் நாளில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அருகே உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
இந்த நிலையில் சதுர்த்தி முடிந்து 5-ம் நாளான நேற்று செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மரக்காணம் கடலில் கரைப்பதற்காக செஞ்சி சத்திர தெருவுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி செஞ்சி வட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஏ.டி.ராஜேந்திரன், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில வர்த்தகப்பிரிவு நிர்வாகி வி.பி.என்.கோபிநாத் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கடலில் கரைக்கப்பட்டன
ஊர்வலமானது செஞ்சி-விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, தேசூர் பாட்டை, செட்டிபாளையம், காந்தி பஜார் வழியாக செஞ்சி கூட்டு ரோடு வழியாக மரக்காணம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கவின்னா, உமாசங்கர், சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.