விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

கரூரில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.;

Update:2022-09-01 23:44 IST

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டன. கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.மேலும் விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஊர்வலம் தொடங்கும் இடமான 80 அடி சாலையில்வாகனங்களில் விநாயகர் சிலைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

சிலைகள் கரைப்பு

பின்னர் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை பார்த்தசாரதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.இந்த ஊர்வலமானது கரூர்-கோவை சாலை, ஜவகர்பஜார், 5 ரோடு, அரசு காலனி வழியாக சென்று வாங்கல் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன.இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நொய்யல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புன்னம் சத்திரம், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர், பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து ெபாதுமக்கள் சாா்பில் ஒரு சில இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்