விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
தேவூர், எடப்பாடி, மேட்டூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.;
தேவூர், எடப்பாடி, மேட்டூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.தேவூர், எடப்பாடி, மேட்டூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.
தேவூர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்த தளமாக கருதப்படுவதாலும், விநாயகர் சிலைகள் கரைக்க இடவசதி உள்ளதாலும் ஒவ்வொரு ஆண்டும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் ஏராளமானவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். முதலாவது நாளான நேற்று சேலம், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, திருச்செங்கோடு, தேவூர், ஜலகண்டாபுரம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றில் ெபாதுமக்கள் கரைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
விநாயகர் சிலைகள் கரைக்க வரும் பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி சங்ககிரி வருவாய் கோட்டாச்சியர் லோநாயகி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் அறிவுடை நம்பி, துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கலைசெல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பண்ணன், செந்தில்குமார், ஸ்ரீதர், சண்முகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பூலாம்பட்டி
எடப்பாடி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.
பின்னர் விநாயகர் சிலைகளை, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றி வண்ண பொடிகளை தூவியபடி மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்து வந்து பூலாம்பட்டி காவிரி கரையில் பூஜைகள் செய்து ஆற்றில் கரைத்தனர். தற்போது காவிரி ஆற்றில் சில பகுதிகளில் குறைவான அளவில் தண்ணீர் உள்ள நிலையில் சில இடங்களில் பக்தர்கள் பரிசல்கள் மூலம் விநாயகர் சிலைகளை ஆற்றின் நடுப்பகுதிக்கு எடுத்து சென்று கரைத்தனர்.
140 சிலைகள்
பூலாம்பட்டி படகு துறை, பூலாம்பட்டி பரிசல் துறை மற்றும் கூடக்கல், குப்பனூர் உள்ளிட்ட காவிரி பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 140-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்தனர். பூலாம்பட்டி காவிரி கரைப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் அதிக எண்ணிக்கையிலான விநாயகர் சிலைகள் இப்பகுதியில் கரைக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்
மேட்டூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மேட்டூர் காவேரி பாலம் அருகில் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.