விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகர் சதுர்த்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

Update: 2022-08-30 18:36 GMT

விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு, பக்தர்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, சாந்தநாதசாமி கோவில் வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதேபோல் சிலைக்கு பயன்படுத்தக்கூடிய அலங்கார குடை, மாலை, தோரணம் ஆகியவையும் விற்பனையானது.

சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதேபோல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் பொதுமக்களும், அதற்கான மேற்கூரை அமைத்து, அலங்காரம் செய்து வருகின்றனர். விநாயகர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலைகள் விற்பனை

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண் சிற்பங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டங்கள் மட்டுமின்றி இப்பகுதியில் செய்யப்படும் மண் சிற்பங்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றவை. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள், புதிதாக சிலைகளை வாங்க வந்தவர்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் மழையூர் பகுதியில் குவிந்தனர். இதனால் சிலைகள் விற்பனை களைகட்டியது.

பஞ்சமுக விநாயகர், மணக்குள விநாயகர், சித்தி விநாயகர், சிங்க வாகன விநாயகர் என 15-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. 2 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக இருந்தன. ஒரு சிலை ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாலிபர்கள் குழுவாக வந்து சிலைகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்