கோவை ஓட்டலில் உல்லாசம்: பேராசிரியையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வங்கி அதிகாரி மீது வழக்கு

கோவை ஓட்டலில் உல்லாசமாக இருந்து விட்டு பேராசிரியையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-04-02 21:41 GMT

கோவை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண், அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்டி. முடித்த அந்த பெண், 2-வது பி.எச்டி. படிப்பிற்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார்.

அந்த பேராசிரியை கடந்த 2015-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்றார். அப்போது அவருக்கு அங்கு ஒரு வங்கியில் கணக்காளராக பணியாற்றிய பாலக்காட்டை சேர்ந்த கோபு குமார் (வயது 43) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது.

நண்பராக விருப்பம்

இந்த நிலையில் வங்கியில் பணம் எடுக்க வந்த பேராசிரியைக்கு, கோபுகுமார் உதவி உள்ளார். பின்னர் அவர் வங்கி செலானில் குறிப்பிட்டு இருந்த பேராசிரியையின் செல்போன் எண்ணில் தொடா்பு கொண்டு, உங்களிடம் நண்பராக இருக்க விரும்புவதாக கூறி அடிக்கடி பேசி வந்தார்.

இந்த நிலையில் பேராசிரியை, தான் பி.எச்டி. படிக்க கோவைக்கு வருவதாக கூறினார். அதை கேட்ட கோபுகுமார், தானும் பி.எச்டி. படிக்க நீங்கள் உதவவேண்டும். எனவே நானும் கோவை வருகிறேன் என்று கூறி உள்ளார்.

ஓட்டலில் தங்கினர்

இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பேராசிரியையும், கோபுகுமாரும் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் காரில் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். அப்போது பேராசிரியையிடம் தனது உறவினர் வீட்டுக்கு செல்லலாம் எனக்கூறி கோபுகுமார் அழைத்து சென்றார். முன்னதாக அவர் சாப்பிடலாம் என்று கூறி காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கினர்.

அங்கு அவர், பேராசிரியையிடம், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்று கூறி திடீரென தான் கொண்டு வந்த தாலியை பேராசிரியையின் கழுத்தில் கட்டியதாக தெரிகிறது. இதனால் பேராசிரியை அதிர்ச்சி அடைந்து தகராறு செய்து உள்ளார்.

மிரட்டி பலாத்காரம்

உடனே பேராசிரியையை சமாதனப்படுத்திய கோபுகுமார் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், உல்லாசமாக இருந்ததை பேராசிரியைக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து உள்ளார். பின்னர் இதை காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பேராசிரியைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகும் விடாமல் கோபுகுமார் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து பேராசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

வழக்கு பதிவு

இதையடுத்து ஆபாச புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோபுகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்