நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆடுகளை விட்டு சென்ற விவசாயி

நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி ஆடுகளை விட்டு சென்றார்

Update: 2022-08-26 16:22 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கின் பின்புறம் உள்ள காலியிடத்தில் இன்று பகலில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மாலை வரை ஆடுகள் அங்கே நின்ற போதிலும் அவைகளை உரிமையாளர் யாரும் வந்து அழைத்து செல்லவில்லை. தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு வந்து ஆடுகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஆடுகளின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ராயப்பன்பட்டி அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்த விவசாயி தென்னரசு என்பவர், தன்னுடைய நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் ஆடுகளை, கலெக்டர் அலுவலகத்தில் விட்டு சென்றதாக தெரியவந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஆட்டுக்குட்டிகளுடன் வந்ததாகவும், மனுவை கொடுத்துவிட்டு ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து தென்னரசுவை போலீசார் தொடர்பு கொண்டு ஆடுகளை அழைத்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் அழைத்து செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டுக்குட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 9 மணி அளவில் தேனி நகராட்சி சந்தை வளாகத்தில் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டிடத்தில் ஆட்டுக்குட்டிகளை போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்