பளியன் குடியிருப்பில் இருந்து சுருளியாறு பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டுயானைகள்:வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பளியன் குடியிருப்பில் இருந்து சுருளியாறு மின்நிலைய பகுதிக்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்தன.;
தண்ணீர் தட்டுப்பாடு
கூடலூர் அருகே வண்ணாத்திப் பாறை, மங்கலதேவி பீட், மாவடி வட்ட தொட்டி பளியன்குடி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் அரிய வகை மரங்களும், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பளியன் குடியிருப்பு மற்றும் நாயக்கர் தொழு பகுதிகள் அமைந்துள்ளன.
தற்போது வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பளியன் குடியிருப்பு மற்றும் நாயக்கர் தொழு பகுதிக்கு வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக பனியன் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இடம்பெயர்ந்த யானைகள்
மேலும் இரவு முழுவதும் அங்கேயே சுற்றித்திரியும் காட்டுயானைகள் அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றன இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் உலா வந்த காட்டுயானைகள் தற்போது இடம்பெயர்ந்தன. சுருளியாறு மின்நிலையத்தை ஒட்டிய சாலை பகுதி வழியாக யானைகஜம், குரங்கடி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளன.
இதனால் பளியன் குடியிருப்பு பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். ஆனால் சுருளியாறு மின் நிலையத்திற்கு செல்லும் ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வரவேண்டிய நிலை உள்ளது. எனவே மின்நிலையம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.