ஆடை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் -குஷ்பு பேட்டி
ஆடை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார்.
கோவை,
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மக்கள் சேவை மையம் சார்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கைத்தறி ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு ஆடை அலங்கார போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து நடிகை குஷ்புவும், வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ.வும் மேடையில் ஒய்யாரமாக (கேட் வாக்) நடந்து சென்று அசத்தினர்.
பின்னர் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது கலாசாரம்
கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும்.
கைத்தறியால் நெய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். பேஷன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள், இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. சிறிய புன்னகை கூட இல்லாமல் எல்லா பேஷன் ஷோக்கள் பார்க்க முடிகின்றது. கல்லூரி மாணவர்களுக்கு மேற்கத்திய உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே வேளையில் நமது கலாசாரங்களை மறந்துவிட வேண்டாம். விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கான நல வாரியம் உருவாக வானதி சீனிவாசன் இருக்கிறார், நான் இருக்கிறேன். எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும். கண்டிப்பாக செய்வோம்.
ஆடை சுதந்திரம்
ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை, ஆனால் மனிதர்களுக்கு 6 அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அதன்படி ஆடை அணிய வேண்டும். ஆடை சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.