மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம்
அம்பையில் பள்ளி மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.
அம்பை:
அம்பை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி நேற்று திறந்ததும் பள்ளிக்கு வந்த மாணவிகளை அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியை கூடலரசி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 4 மாணவிகளுக்கு நகரசபை தலைவர் சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி பெரியார் செல்வி, உறுப்பினர்கள் ராமசாமி, கோதர் இஸ்மாயில், கவுன்சிலர்கள் பேச்சியம்மாள், பேச்சிக்கனியம்மாள், உதவி தலைமை ஆசிரியர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.