இலவச கட்டாயக் கல்வி சட்டம்: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கியது.;
சென்னை,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அறி விக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவி களுக்கு பள்ளிகல்வித்துறை கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.
அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது.
எனவே, விருப்பமுள்ள பெற்றோர்கள் https://rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரே பள்ளியில் குறிப்பிட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் குவிந்தால், அந்த இடங்களுக்கு குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.