ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.;

Update:2023-02-26 16:32 IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் httaP://ssc.nic.in வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பல்வேறு தேர்வுகளுக்கான 11 ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.

இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பதிவு செய்யலாம்

இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

இப்பதவிக்கான தேர்வு முறையானது 3 முறைகளில் நடைபெற உள்ளது. இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்