செல்போன்கள் மூலம் நூதன மோசடி
செல்போன்கள் மூலம் நூதன மோசடி குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.
குரல் பதிவு அழைப்புகள்
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'சென்னைக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதனமுறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.
மெகா பரிசு
அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.
விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.
இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-
சைபர்கிரைம்
மூத்த வக்கீல் கவியரசன்:- கிராம மற்றும் நகர மக்களிடம் செல்போனில் பெண்கள் தொடர்பு கொண்டு நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். வங்கிகளின் விவரங்களை கேட்பது, மேலும் ஏ.டி.எம். நம்பர் மற்றும் ஆதார் எண் போன்றவற்றை கேட்டு அதன்மூலம் வங்கியில் உள்ள பணங்களை ஆன்லைன் மூலம் திருடிவிடுகின்றனர். பொதுமக்களை நம்ப வைப்பது போல அவர்கள் பேசுகின்றனர்.
இது ஏராளமான நபர்களிடம் நடந்துள்ளது. தற்போது ஜிபே, போன் பேமூலம் ஏதாவது ஒரு தொகையை அனுப்பி தவறுதலாக வந்துவிட்டது. அந்த பணத்தை திருப்பி அனுப்புங்கள் என்று கூறுகின்றனர். பணத்தை அனுப்பிய உடன் அனுப்பிய நபரின் வங்கிகணக்கில் உள்ள அனைத்து ரூபாய்களும் திருடப்பட்டுவிடுகிது. இவ்வாறு பேசும் நபர்களிடமிருந்து தம்மை காப்பாற்றிகொள்ள சைபர்கிரைம் போலீசார் ஹெல்ப்லைன் நம்பர் 1930 நம்பருக்கு போன் செய்ய வேண்டும். மேலும் சைபர்கிரைம் போலீஸ் நிலையம் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
உஷாராக இருக்க வேண்டும்
சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர் பகவதி:- அண்மை காலமாக நூதன முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக செல்போனில் ஆசை வார்த்தை கூறி உதவி செய்வதாகவும், பழுதுகளை சரி செய்வதாகவும் கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்கிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில செல்போன்களில் மேஜிக்வாய்ஸ் என்ற சாப்ட்வேர் மூலம் ஆண்களே பெண்கள் போல் பேச முடியும். இந்த நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் பல இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு யாராவது போன் செய்து உங்கள் ஏ.டி.எம். கார்டு பழுதாகி விட்டது. அதனை சரி செய்ய வங்கி கணக்கு எண், ஒரு முறை வரும் கடவு எண் (ஓ.டி.பி.எண்) ஆகியவற்றை கேட்டால் உடனே தெரிவிக்க கூடாது. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியிடம் தொடர்ப்பு கொண்டு பேச வேண்டும் அல்லது வாய்ப்பு கிடைக்கும்போது வங்கிக்கு நேரில் சென்று பிரச்சினைகளை சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் யார் கேட்டாலும் வங்கி எண்ணையும், ஆதார் எண்ணையும், ஓ.டி.பி. எண்ணையும் கூறினால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. பல இடங்களில் இது போன்ற ஏமாற்று சம்பவங்கள் நடந்து உள்ளது. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
பணத்தை இழக்க வாய்ப்பு
விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயக்குமார்:- சமீப காலமாக கணினி தொழில்நுட்ப வளர்ச்சி அமோகமாக ஏற்பட்டுவிட்ட நிலையில் அதனை ஆக்கபூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பணமோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதில் ஆசை வார்த்தை கூறி பணத்தை பறிக்கும் நடைமுறை அதிகமாக உள்ளது.
எனவே அறிமுகமில்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தங்கள் வங்கி கணக்கு விவரங்களை கேட்டாலும் அதை தெரிவிப்பது பணத்தை இழப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடும். அதிலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும் மோசடி நடைபெறுகிறது. எந்த வகையிலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பண விஷயமாக எக்காரணத்தை கொண்டு பேசுவது விபரீதமாகவே முடிந்து விடும். அதனை தவிர்க்க வேண்டும்.
விழிப்புணா்வு இல்லை
வத்திராயிருப்பு பேராசிரியர் போதுமணி:- தொலைபேசி மூலமாக குரலை மாற்றி பேசி பல நூதன மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொலைபேசி மூலமாக பெண்களுக்கும் பல்வேறு வகையான தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபாச பேச்சுக்கள் பேசுவது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களும், இணைய வழி குற்றங்களும் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
மண்ணாசை, பெண்ணாசை இவை இரண்டின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேராசையே இதற்கு அடிப்படை காரணம். மக்கள் இதிலிருந்து வெளியே வந்தால் இது போன்ற குற்ற செயல்களை கணிசமாக குறைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.40 லட்சம் மீட்பு
மணிவண்ணன் (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சைபர் கிரைம் குற்றப்பிரிவு, விருதுநகர்):-
பொதுவில் பண பரிவர்த்தனை தொடர்பாக செல்போனில் யார் தொடர்பு கொண்டாலும் அவர்களிடம் உங்களது வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு எண் போன்ற விவரங்களை தெரிவிக்க கூடாது. அரசு நலத்திட்ட உதவி, அரசு சலுகைகள் பெற்று தருவதாக கூறி ஏமாற்ற வாய்ப்புள்ளது. மேலும் பரிசுகள் கிடைத்துள்ளதாகவும், பரிசு பணத்தை செலுத்துவதற்காக உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை தருமாறும் கேட்பவர்களை நம்பி விவரங்களை தரக்கூடாது. மொத்தத்தில் பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் போலீஸ் கட்டணமில்லா டெலிபோன் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கணினியில் பயிற்சி பெற்ற போலீசார் இதற்காக பணியமத்தப்பட்டுள்ளனர். எனவே ஆன்லைனில் பணம் இழந்தது குறித்து எவ்வித தயக்கமோ அல்லது பயமோ இன்றி உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை மீட்க வாய்ப்பு ஏற்படும். மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 28 பேரிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் ரூ.40 லட்சம் மீடகப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடுவர்களில் பெரும்பாலானோர் வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே மாவட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஆன்லைன் பண இழப்பு குறித்து தயக்கம் இல்லாமல் எங்களுக்கு தெரிவித்து உங்களுக்கு உதவ வாய்ப்பு தாருங்கள்.