கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி தோழியாக பழகி ஏமாற்றிய பெண் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் தோழியாக பழகி, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 36). இவருக்கு கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்த பெரியசாமி மகள் சாந்தகுமாரி என்பவர் அறிமுகமானார். இதன் பின்னர் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆனந்தியின் தம்பி வசந்த் என்பவர் பி.காம். படித்து முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வசந்த் வேலை பார்ப்பது பற்றி அறிந்த சாந்தகுமாரி, அவருக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் ஆனந்தியிடம் கூறியுள்ளார்.
எவ்வாறு என்று கேட்டபோது, சாந்தகுமாரி, தனது கணவர் தேவதாஸ் என்பவர் கள்ளக்குறிச்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாகவும், அவரிடம் கூறி வசந்திற்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார்.
மோசடி
ஆனால், அதற்கு பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ஆனந்தி ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என்று 2 தவணையாக மொத்தம் ரூ. 15 லட்சத்தை ஆனந்தி கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட, சாந்தகுமாரி இதுவரைக்கும் அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப தருமாறு ஆனந்தி கேட்டுள்ளார். இதற்கிடையே சாந்தகுமாரி திடீரென தலைமறை வாகிவிட்டார். இதுகுறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.