தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6½ லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-11-10 18:45 GMT

கோவையில் ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். ஆன்லைனில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதை பார்த்த பிரவீன்குமார் முதற்கட்டமாக அந்த நிறுவனத்தில் ரூ.1000 முதலீடு செய்தார். சில மணி நேரத்தில் அவருக்கு ரூ.1200 கிடைத்தது. மேலும் அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய நபர்கள், நீங்கள் எங்கள் நிறுவனத்தில் அதிக தொகை முதலீடு செய்தால் ஓரிரு நாட்களில் அதிக லாபம் பெறலாம் என்றனர்.

ரூ.6½ லட்சம் செலுத்தினார்

அதை நம்பிய பிரவீன்குமார் பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்தை செலுத்தினார். உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பேசிய நபர்கள், உங்கள் வங்கி கணக்குக்கு விரைவில் ரூ.7½ லட்சத்துக்கும் மேல் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர். ஆனால் 3 நாட்கள் ஆகியும் அவர்கள் கூறியபடி பணம் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார், தன்னிடம் பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. உடனே அவர், அந்த தனியார் நிறுவ னத்தின் இ-மெயில் ஐ.டி.க்கு தகவல் அனுப்பினார். அதன்பிறகும் பணம் அனுப்பி வைக்கப்படவில்லை.

மோசடி

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ஆன்லைனில் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் உடனே கூடுதல் பணம் கொடுப்பார்கள். அதை நம்பி அதிக பணத்தை முதலீடு செய்தால் மோசடி செய்து விடுவார்கள். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்