வீட்டுமனை தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி
விழுப்புரத்தில் வீட்டுமனை தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் தாலுகா முதலூரை சேர்ந்தவர் சடகோபன் (வயது 57). விவசாயி. இவர் விழுப்புரம்-திருச்சி சாலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பனையபுரம் கிராம எல்லையில் உள்ள வீட்டுமனைப்பிரிவில் 1,400 சதுர அடி (3 செண்ட்) வீட்டுமனை வாங்க முடிவு செய்தார். அதற்காக கடந்த 2015 முதல் 2016-ம் ஆண்டு வரை 5 தவணைகளாக மொத்தம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை கட்டினார். ஆனால் பணத்தை பெற்ற ரியல் எஸ்டேட் நிர்வாகத்தினர், சடகோபனுக்கு இதுநாள் வரையிலும் மனையை கிரயம் செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் நிறுவன கிளை மேலாளரான விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார், நிறுவன ஊழியர்களான சென்னையை சேர்ந்த தனபால், ரவிச்சந்திரன், பொது மேலாளர் சென்னையை சேர்ந்த சுனில் ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.