போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது

போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-20 19:50 GMT

போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

புகார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்தையா மகன் பார்த்தசாரதி. இவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். அங்கு வேலை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி, இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தேன். இந்த நிலையில் என்னை செங்கோட்டை பகுதியை சேர்ந்த கோமு மகன் பாலகிருஷ்ணன் என்பவர் அணுகி, நான் போலீஸ் போன்ற தோற்றத்தில் உள்ளதாகவும், தற்போது தமிழக சி.பி.சி.ஐ.டி. காவல் துறையில் புதிதாக நுண்ணறிவு உளவு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தற்போது ஆள் சேர்ப்பு பணியானது நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ரூ.40 லட்சம் மோசடி

மேலும் அவருக்கு ஐ.ஜி. போன்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் நெருக்கமானவர்கள் எனவும், அவர்கள் மூலம் என்னை அந்த பணியில் சேர்த்து விடுவதாகவும் கூறி சிறுக சிறுக ரூ.40 லட்சம் பணத்தை பெற்றார். பின்னர் என்னை அழைத்து சி.பி.சி.ஐ.டி. உளவுப்பிரிவில் சார்பு ஆய்வாளராக என்னை நியமித்துள்ளதாக கூறி ஒரு பணி நியமன ஆணையும் வழங்கினார். அதனை எனக்கு தெரிந்த ஒருவரிடம் காட்டியபோது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

பின்னர் நான் எனது குடும்பத்துடன் சென்று அவரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, பணமும் தர முடியாது, வேலையும் வாங்கித்தர முடியாது எனக்கூறி என்னை மிரட்டினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பா.ஜனதா முன்னாள் நிர்வாகி கைது

இந்த புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பார்த்தசாரதியிடம் பாலகிருஷ்ணன் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததும், அவர் பா.ஜனதா செங்கோட்டை நகர முன்னாள் பொதுச்செயலாளர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்