பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி; தம்பதி கைது
பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.;
சென்னை ராயபுரம், ராமா தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 47). இவர், 2019-ம் ஆண்டு கொடுங்கையூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவருடன் கொளத்தூர், செல்லியம்மன் நகரைச் சேர்ந்த வைரமுத்து (45) என்பவரும் வேலை பார்த்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு இருவரும் வேலையிழந்தனர்.
அப்போது வைரமுத்து மற்றும் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி(36) ஆகியோர் விவேகானந்திடம் தனது தாய் வருமான வரித்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருக்கு உயரதிகாரிகள் அனைவரும் தெரியும். எனவே உங்கள் மனைவிக்கு தனியார் கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கி தருவாக ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பிய விவேகானந்தன், வைரமுத்துவின் வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சத்தை அனுப்பி வைத்தார். ஆனால் சொன்னபடி தனது மனைவிக்கு பேராசிரியர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால் இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த வைரமுத்து, உமா மகேஸ்வரி மற்றும் வைரமுத்துவின் தாய் வேதவள்ளி (72) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் வேதவள்ளி, போலீஸ் நிலைய பிணையில் விடுவித்த போலீசார், கணவன்-மனைவி இருவரையும் சிறையில் அடைத்தனர்.