என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-21 00:15 IST

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

கோவை கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் (வயது 54). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது அந்த நபர் குறுஞ்செய்தி மூலமாக செந்தில் வடிவேலிடம் அடிக்கடி பேசி வந்தார்.

மேலும் அந்த நபர், தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 முதல் 20 சதவீதம் வரை லாபம் தருவதாகவும் கூறி உள்ளார்.

அதை நம்பிய செந்தில் வடிவேல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார்.

ரூ.1 லட்சம் மோசடி

ஆனால் அந்த நபர் கூறியது போன்று லாபத்தொகையை வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி அந்த நபரை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு தான் செலுத்திய பணத்தை திரும்பி தருமாறு செந்தில்வடிவேல் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில் வடிவேல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சென்னையை சேர்ந்த நவீன்குமார் (33) என்பவர் தான் செந்தில்வடிவேலிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நவீன்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்