கடலூரில்ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடிபெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கடலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனா்.;
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் மசூதி தெரு, இரட்டைபிள்ளையார் கோவில் தெரு, சுப்பிரமணியசுவாமி கோவில் தெரு, ராமதாஸ் நாயுடு தெரு பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புதுப்பாளையம் மசூதி தெருவை சேர்ந்த பெண் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.60 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என தனித்தனி ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் நாங்கள் நம்பிக்கை அடிப்படையில் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வந்தோம். தீபாவளி சீட்டும் நடத்தினார். எங்கள் குழந்தைகள் வேலைவாய்ப்பு, படிப்பு செலவு, திருமண செலவு என ஏதாவது ஒரு வகையில் பயன்படும் என்பதற்காக அந்த ஏலச்சீட்டில் சேர்ந்தோம். நாங்கள் மட்டுமின்றி எங்களுக்கு பழக்கமானவர்களையும் அந்த ஏலச்சீட்டில் சேர்த்து விட்டோம். ஆனால் அவர் சீட்டு முடிந்து அனைவருக்கும் ரூ.1 கோடி வரை தர வேண்டியதிருக்கிறது. அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். தற்போது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். அவரது செல்போன் எண்ணையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ஆகவே எங்களிடம் நம்பிக்கை மோசடி செய்து பணத்தை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.