இன்சூரன்ஸ் பணம் வசூலித்து மோசடி
பிரபல நிறுவனம் பெயரில் இன்சூரன்ஸ் பணம் வசூலித்து மோசடி செய்யப்படுவதாக கோைவ போலீஸ் கமிஷனரிடம், அந்த நிறுவன அதிகாரி புகார் அளித்து உள்ளார்.;
பிரபல நிறுவனம் பெயரில் இன்சூரன்ஸ் பணம் வசூலித்து மோசடி செய்யப்படுவதாக கோைவ போலீஸ் கமிஷனரிடம், அந்த நிறுவன அதிகாரி புகார் அளித்து உள்ளார்.
பணம் வசூல்
சென்னை மயிலாப்பூரில் செயல்படும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி அருண்குமார், கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
திருப்பூரை சேர்ந்த ஸ்ரீஹரி என்பவர் கடந்த மார்ச் மாதம் மோட்டார் சைக்களில் செல்லும்போது, வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர், கோவை மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து மோதிய வாகனத்தின் இன்சூரன்ஸ் பதிவு அடிப்படையில், எங்கள் நிறுவனத்துக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக விவரங்களை சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு எங்கள் நிறுவனம் சார்பில் இன்சூரன்ஸ் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. யாரோ போலியாக எங்கள் நிறுவனம் பெயரில் பாலிசி போட்டு பணத்தை வசூலித்து வந்து உள்ளனர்.
நடவடிக்கை
அந்த வாகனத்துக்கு பாபு மேத்யூ என்ற பெயரில் எங்களது நிறுவனம் பெயரில் போலியாக இன்சூரன்ஸ் தயார் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர் மற்றும் அதற்கு காரணமானவர்களை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி அருண்குமார் கூறும்போது, இதுபோன்று ஏற்கனவே 18 மோசடி புகார்கள் எங்கள் நிறுவனத்துக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இன்சூரன்ஸ் போடும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உரியதா? என்பதை விசாரிக்க வேண்டும் என்றார்.