தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-14 19:30 GMT

கிருஷ்ணகிரி:

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல்

ஓசூர் துவாரகா நகரை சேர்ந்தவர் தென்றலரசு (வயது 58). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் முகவரிக்கு சட்டவிரோதமாக போதை பொருட்கள் பார்சல், கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீங்கள் விளக்கமளிக்க வேண்டும் என இருந்தது. சிறிது நேரத்தில் தென்றலரசுவுடன் மர்ம நபர்கள் `ஸ்கைப் வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டனர். அதில் பேசியவர்கள் போலீஸ் உடையுடன் தாங்கள் மும்பை போலீசார் என்றும், உங்களுக்கு சட்ட விரோதமாக போதை பொருட்கள் வந்துள்ளது. உங்கள் வங்கி கணக்கில் ஹவாலா பணமும் இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே உங்கள் மீது வழக்குபதிந்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய உள்ளோம். விசாரணையில் உங்கள் மீது தவறு இல்லாதபட்சத்தில் பணம் உங்களிடம் வழங்கப்படும். வழக்கு போடாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது.

போலீஸ் உடையில் மிரட்டியதால் பயந்த தென்றலரசு அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.16 லட்சத்து 44 ஆயிரத்து 46-ஐ அனுப்பினார். அதன் பின் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நம் மீது எந்த தவறும் இல்லாதபட்சத்தில் எதற்காக நம்மிடம் இப்படி பேசி பணத்தை வாங்கினர். தன்னை ஏமாற்றுவதற்காகவே நாடகமாடியுள்ளனர் என்பதை புரிந்து கொண்ட தென்றலரசு இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஓசூர் விகாஸ் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (31), இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது `வாட்ஸ் அப்' எண்ணிற்கு கடந்த 3-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் நாங்கள் அனுப்பும் கூகுள் மேப்பிற்கு நீங்கள் ரேட்டிங் கொடுக்க வேண்டும். பணம் முதலீடு செய்தால் அதற்கான லாபத்துடன் முதலீடும் கிடைக்கும் என கூறியுள்ளனர். சிறிதளவு பணம் போட்டு லாபம் பார்த்த கார்த்திக், தன்னிடம் இருந்த ரூ.25 லட்சத்து, 52 ஆயிரத்து 800-ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில் செலுத்தினார்.

அதன் பின் அந்த நபர்கள் இவரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த 2 புகார்கள் குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்