கீழடி அகழாய்வில் கிடைத்த 8 கிராம் ஸ்படிக எடைக்கல்
கீழடி அகழாய்வு குழியில் தோண்டியபோது, 8 கிராம் எடை கொண்ட ஸ்படிக எடைக்கல் வெளிவந்தது. ஆபரணங்கள் எடையை அறிய இதை முற்காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.
திருப்புவனம்
கீழடி அகழாய்வு குழியில் தோண்டியபோது, 8 கிராம் எடை கொண்ட ஸ்படிக எடைக்கல் வெளிவந்தது. ஆபரணங்கள் எடையை அறிய இதை முற்காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.
ஸ்படிக எடைக்கல்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் மூலம் 8 கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கீழடி, அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த முறையும் ஏராளமான பொருட்கள், அகழாய்வு குழிகளை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
9-ம் கட்ட அகழாய்வுக்காக கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதில் 9-வது குழியை தொடர்ந்து தோண்டியபோது, கிட்டத்தட்ட 6 அடி ஆழத்தில் ஸ்படிகத்தால் செய்த எடைக்கல் ஒன்று வெளிவந்தது.
8 கிராம் எடை
இந்த எடைக்கல் சற்று கோள வடிவில் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், ஒளி புகும் தண்மையுடனும் காணப்படுகிறது. 2 செ.மீ. விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் சரியாக 8 கிராம் எடையுடனும் உள்ளது. காண்பதற்கு மிகவும் அழகாகவும் காட்சி தருகிறது.
தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரண பொருட்களை எடை ேபாட அக்காலத்தில் இதை பயன்படுத்தி இருக்கலாம் என்றும், சரியாக 8 கிராம் (ஒரு பவுன்) எடையில் இந்த ஸ்படிக கல் இருப்பதால் அவ்வாறு கருதத்தோன்றுவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இதுதவிர சுடு மண்ணால் செய்த வட்டச்சில்லுகள், ஆணி, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவையும் அதே அகழாய்வு குழியில் கிடைத்துள்ளதாக மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.