முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை இறந்தது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை இறந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே வடசேரிப்பட்டியில் பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 2-ந் தேதி ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வின் கருப்பு கொம்பன் காளையும் களமிறங்கியது. இந்த நிலையில் வாடிவாசலை விட்டு வெளியேறிய கருப்பு கொம்பன் காளை வாடிவாசல் தடுப்பு கட்டையில் மோதி திடீரென மயங்கி கீழே விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் காளையை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 நாட்கள் அந்த காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருப்பு கொம்பன் காளை பரிதாபமாக செத்தது.
இதனையடுத்து இறந்த காளையை இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அவரது குடும்பத்தினர், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு மனிதருக்கு செய்வதை போல சடங்குகள் செய்து கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர். கருப்பு கொம்பன் காளை இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. காளைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார்.