ஆன்லைன் மூலமாக 2 பேரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1¾ லட்சம் மீட்பு- ஈரோடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

ஆன்லைன் மூலமாக 2 பேரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1¾ லட்சத்தை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.;

Update:2022-09-08 03:24 IST

ஈரோடு

ஆன்லைன் மூலமாக 2 பேரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1¾ லட்சத்தை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

மோசடி

கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 24 வயது பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் உள்ள லிங்கை அவர் அழுத்தியதும், வங்கி கணக்கு தகவலை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அவர் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்த உடன், வங்கி கணக்கில் இருந்து ரூ.77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல் ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சதீஸ் (வயது 50) என்பவர் தொழில் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு கடன் பெறுவதற்கான குறுந்தகவல் வந்தது.

அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, ரூ.10 லட்சம் கடன் கொடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், கடன் பெறுவதற்கு ரூ.1 லட்சம் வரை சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அதை நம்பி சதீஸ் ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார். ஆனால் கடன் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அவர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

மீட்பு

இந்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோபியை சேர்ந்த பெண்ணிடம் மேற்கு வங்காளத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணம் எடுக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கப்பட்டு, ரூ.77 ஆயிரத்து 950 மீட்கப்பட்டு மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சதீசிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை போலீசார் மீட்டு, அவரிடம் ஒப்படைத்தார்கள்.

எனவே செல்போனில் வரும் கவர்ச்சிகரமான தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்