கொடைக்கானல் மலைப்பாதையில் காட்டுத்தீ
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதி, வருவாய்த்துறை நிலங்கள், தனியார் தோட்டங்களில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. அதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிவதும், அணைவதுமாக இருந்தது. இந்நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் புலிச்சோலை என்ற இடத்திற்கு அருகே உள்ள வனப்பகுதி, வருவாய் நிலங்களில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் அங்கிருந்து இடம்பெயர்ந்தன. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.