சத்தியமங்கலம் வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக எரியும் காட்டுத்தீ ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை

ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை

Update: 2023-04-18 21:48 GMT

தொடர்ந்து 3-வது நாளாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்து உள்ளனர்.

காட்டுத்தீ

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகத்துக்குட்பட்டது கம்பத்துராயன்கிரி வனப்பகுதி. கோடை காலம் காரணமாக வனப்பகுதி வறட்சியாக காணப்படுகிறது. இதனால் செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு கம்பத்துராயன்கிரி வனப்பகுதியில் மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பிடித்தது. இதனால் தீ வேகமாக பரவி வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தது.

3-வது நாளாக...

காட்டுத்தீ ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் தீ ஏற்பட்டதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் மேலும் 20 வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதன்காரணமாக நேற்று மாலையில் கம்பத்துராயன்கிரி வனப்பகுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ புளியங்கோம்பை மேல் பகுதியில் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து 3-வது நாளாக எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள், சிறிய மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளன.

ஹெலிகாப்டர்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'காட்டுத்தீ ஏற்பட்டு உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி ஆகும். அங்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாது. மேலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரும் இல்லை. இதனால் பச்சையான மரக்கிளைகளை ஒடித்துதான் தீ அணைக்கப்பட்டு வருகிறது. இதனால் தீயை முழுமையாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்