வனத்துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்
காட்டு யானைகள் அட்டகாசம் எதிரொலியாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;
பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பெருங்கரை, சேலக்குன்னு, ஏலமன்னா, எலியாஸ் கடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விளைநிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள தென்னை, பாக்கு, வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் உப்பட்டியில் இருந்து பெருங்கரை முருகன் கோவில் வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பந்தலூர்-பாட்டவயல் சாலையில் உள்ள உப்பட்டியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின் படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் எலியாஸ் கடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பிதிர்காடு வனச்சரகர் ரவி தலைமையில் உப்பட்டி, பெருங்கரை பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.