வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை
யானைகள், பயிர்களை சேதப்படுத்துவது குறித்து தெரிவித்தால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என குறை தீர்வுகூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுப்பதில்லை
பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் நெடுமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
சேராங்கல் கிராமத்தில் தொடர்ந்து யானைகள் பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இது பற்றி இங்கு குறைகள் தெரிவித்தால் பேரணாம்பட்டு வனச்சரகர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த நிலையில் விவசாய நிலங்களில் தொடர்ந்து குரங்குகள், மான்கள், மயில்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
கட்டுப்படுத்த வேண்டும்
நிலமில்லாதவர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு ஓட்டி செல்கின்றனர். ஆனால் மாடுகள் விவசாய நிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்துகிறது. மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அந்தந்த கிராமத்திலுள்ள ஊர் நாட்டாண்மைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.
பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்களை பேரணாம்பட்டு காய்கறி மார்க்கெட்டுக்கு அதிகாலையில் கொண்டுவருகின்றனர். இங்கு 30 ஆண்டுகளாக கழிப்பிட வசதி இல்லாததலால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பலராமன், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் உதயகுமார், வனவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர்கள் கீதா, சரஸ்வதி, உதவி வேளாண்மை அலுவலர் செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.