வதந்திகள் குறித்து வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டாம்
வதந்திகள் குறித்து வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டாம் என ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கூறினார்.;
சிவகாசி,
வதந்திகள் குறித்து வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டாம் என ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிவகாசி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி மற்ற பெருநகரங்களை விட சிவகாசியில் கூடுதலான தொழிற்சாலைகள் உள்ளன. உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களின் நலன் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இலவச தொலைபேசி எண்
அதிகாரிகளின் ஆய்வில் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறைகளை நீங்கள் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிவர்த்தி செய்வார்கள். எந்த பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் பணி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். வதந்திகள் குறித்து அச்சப்பட வேண்டாம். சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகும் வீடியோக்களை நம்ப வேண்டாம். உங்கள் பிரச்சினைகளை உங்கள் நிர்வாகத்திடம் தெரிவியுங்கள் நிச்சயம் தீர்வு காணப்படும். அச்சமின்றி விருதுநகர் மாவட்டத்தில் நீங்கள் பணியாற்றலாம்.
குடும்பத்தினருக்கு தெரிவியுங்கள்
நீங்கள் பிரச்சினை இன்றி பணியாற்றி வருவதை உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மதுரை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் வேல்முருகன், காளிதாஸ், சிவகாசி தாசில்தார் லோகநாதன், இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், 150-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.