தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தூத்துக்குடி அருகே தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Update: 2023-01-04 21:26 GMT

தூத்துக்குடி,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இவ்விழாவை நேற்று வெளிநாட்டினர் தூத்துக்குடி அருகே கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ''ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்' என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழகத்துக்கு அழைத்து வந்தது. 16-வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 37 சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். அவர்கள் 17 ஆட்டோக்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே ஆட்டோக்களையும் ஓட்டிச்சென்றனர்.

பொங்கலிட்டு மகிழ்ந்தனர்

கடந்த 28-ந்தேதி சென்னையில் இருந்து ஆட்டோக்களில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம் வழியாக தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாயர்புரம் அருகே தனியார் பண்ணை தோட்டத்துக்கு சென்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து அசத்தலாக வந்த வெளிநாட்டினருக்கு கிராம மக்கள் நெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக அவர்களே அடுப்புகளில் பனை ஓலைகளால் தீ மூட்டினர். புதுப்பானைகளில் பச்சரிசி, சர்க்கரை போன்றவற்றை போட்டு பொங்கலிட்டனர். பானைகளில் பொங்கல் பொங்கி வழிந்தபோது, 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ததும்ப குரல் எழுப்பி குலவையிட்டனர்.

தொடர்ந்து சர்க்கரை பொங்கலை சுவைத்து மகிழ்ந்த வெளிநாட்டினர், சுவையான பொங்கலை சமைத்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். பின்னர் சிறுதானியம், கேழ்வரகு, கம்பு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளையும் ருசித்தனர்.

தமிழர்களின் கலாசாரம் எங்களை கவர்ந்தது

பொங்கல் வைத்தது குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொங்கல் விழாவை கொண்டாடியது வித்தியாசமான அனுபவத்துடன் உற்சாகத்தை தந்துள்ளது'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்