தமிழகத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மதுரையில் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்- மாநகராட்சி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது

தமிழகத்தில் முதல் முறையாக, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-10-19 21:47 GMT



தீர்மானம்

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்து உள்ளது. அதற்கான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த திட்டம் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த் கூறியதாவது:-

இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மதுரை மாநகராட்சி ஆதிமூலம் பள்ளியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைத்தது, மதுரைக்கு கிடைத்த சிறப்பு. தற்போது மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 74 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 7 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

ஊட்டச்சத்து

இந்த திட்டத்தால் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த திட்டம் ஏழை மாணவ-மாணவிகளின் படிப்பினை ஊக்கப்படுத்துகிறது. அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குகிறது. இடை நிற்றலை தடுக்கிறது.

அதோடு தாய்மார்களின் பணிச்சுமையினை முற்றிலும் குறைக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக, முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

1,350 மாணவ-மாணவிகள்

அதன்படி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 28 பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 1,350 மாணவ-மாணவிகளுக்கும் இனி காலை உணவு மதுரை மாநகராட்சி மூலம் வழங்கப்படும். தனியார் சமூக பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான தீர்மானம் அனைவரின் ஆதரவுடன் மதுரை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்