பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு விருது

பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு விருது

Update: 2022-10-20 22:16 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விருது

தமிழக அரசு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் "பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்க மாநில விருது வழங்கி வருகிறது.

அவ்வாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது. எனவே விருது பெற தகுதியுள்ள 13 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வேறு எதாவது வகையில் சிறப்பான அல்லது தனித்துவமான சாதனை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆதாரங்கள்

மேலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருக்கலாம்.

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரையில் குழந்தையின் பெயர், பெற்றோர் முகவரி, ஆதார் எண், புகைப்படம், ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்புக் கட்டிடம், தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நாகர்கோவில் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04652-278404 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்