கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்குபோதிய பாதுகாப்பு ஏற்படுத்தாத உரிமையாளர்களுக்கு அபராதம்:கலெக்டர் எச்சரிக்கை

செப்டிக் டேங்குகளில் இருந்து கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

Update: 2023-02-19 18:45 GMT

ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்ட பேரூராட்சிகளில் 'சபாய் மித்ரா சுரக் ஷிட் ஷேஹார்' எனும் திட்டத்தின் கீழ் கழிவு நீர் தொட்டிகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் செப்டிக் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

பேரூராட்சிகளில் திறந்த வெளி, நீர் நிலைகளில் மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுவதால், சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே, செப்டிக் டேங்குகளில் இருந்து மலக்கசடுகள் மற்றும் கழிவு நீரினை பாதுகாப்பாக வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு லாரிகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குளங்களின் வெளியேற்றுதலுக்காக பயன்படும் பிற வாகனங்களின் இயக்கம், இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தினை ஒழுங்குமுறைப்படுத்துதல் அவசியம்.

உரிமையாளர்களுக்கு அபராதம்

இத்தகைய வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பேரூராட்சியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்படுத்தாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

பேரூராட்சிகளின் எல்லைக்குள் லாரிகள், இழுவை வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மலக்கசடு, கழிவுநீர் சேகரித்தல், கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடும் எவரும் தொடர்புடைய பேரூராட்சிகளில் உரிய ஆவணங்களுடன் ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை செயல் அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வெண்டும்.

அனைத்து தூய்மைப் பணியாளர்களும் வாரியத்தில் பதிவு செய்திட வேண்டும். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அபாயகரமான தொழிலில் ஈடுபடுவோர், புதிதாக ஈடுபடுவோர் குறித்து பதிவேடுகள் பேணப்பட வேண்டும். புதிதாக சேருபவர்களுக்கு உடனடியாக பயிற்சி வழங்கப்பட வேண்டும். கழிவு நீர் சரியான முறையில் வெளியேற்றப்படுவதும், இப்பணிகள் முறையாக செயல்படுத்தப்படுவதையும், பேரூராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்