பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டிஇரட்டை மாட்டுவண்டி பந்தயம்
கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாளையொட்டி நேற்று கூடலூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாளையொட்டி நேற்று கூடலூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் செந்தூர்பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இளம் ஜோடி, புள்ளிமான் சிட்டு, தட்டாண்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, ஆகிய 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 175-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டுவண்டிகள், காளைகளுடன் பங்கேற்றன.
காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக நடு மாடு பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் வரை நிர்ணயிக்கப்பட்டது. கூடலூர்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுவண்டிகளுடன் சீறிப் பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு- வைகை பாசன விவசாய சங்கத்தினர் செய்திருந்தனர்.