13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்குஅடையாள அட்டை
மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.;
வாக்காளர் சேர்க்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 285 ஆண்கள், 9 லட்சத்து 68 ஆயிரத்து 393 பெண்கள், 214 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையொட்டி ஆன்லைன் மூலமாகவும், தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அடையாள அட்டை
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அடையாள அட்டையை அனுப்பி இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 976 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டை தபாலில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதில் பழனி தொகுதியில் 1,947 பேருக்கும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2,185 பேருக்கும், ஆத்தூர் தொகுதியில் 1,755 பேருக்கும், நிலக்கோட்டை தொகுதியில் 1,600 பேருக்கும், நத்தம் தொகுதியில் 1,282 பேருக்கும், திண்டுக்கல் தொகுதியில் 2,363 பேருக்கும், வேடசந்தூர் தொகுதியில் 1,844 பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.