வடபாதிமங்கலத்தில் நடைபாலம் சீரமைக்கப்பட்டது

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் நடைபாலம் சீரமைக்கப்பட்டது.

Update: 2023-07-06 18:45 GMT

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் கோம்பூர் மாதாகோவில் தெரு உள்ளது. இந்த கிராமத்திற்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் கட்டப்பட்டது. இந்த நடைபாலத்தை கிளியனூர், கோம்பூர் மாதாகோவில் தெரு, புனவாசல், சாத்தனூர், பழையனூர், அழகியநாதன்கோம்பூர், வடபாதிமங்கலம், காக்கையாடி, ஓவர்ச்சேரி, வேற்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வர வேண்டும்.

அதேபோல் சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் வழிபாட்டு தலங்கள், கடைவீதி, பஸ் நிறுத்தம் போன்ற இடங்களுக்கு அந்த பகுதி மக்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.

ஆற்றுக்குள் இடிந்து விழுந்த தளங்கள்

இந்த பாலத்தில் மக்கள் நடந்து வருவதற்கு ஏதுவாக சிமெண்டு தளங்கள் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த தளங்களில் சில இடிந்து ஆற்றுக்குள் விழுந்ததால், தளங்களுக்கு பதிலாக மூங்கில் மரங்கள் கட்டப்பட்டது. ஆனால் மரங்கள் மீது நடந்து சென்று வர அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதனால் சிமெண்டு தளங்கள் இடிந்த இடத்தில் புதிதாக சிமெண்டு தளங்கள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சீரமைக்கப்பட்டது

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியினது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, புதிதாக சிமெண்டு தளங்கள் அமைத்து சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்