கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம்: டாக்டர்களிடம் போலீசார் விசாரணை

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-12-05 23:34 GMT

சென்னை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் - உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது 17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் மூட்டுவலி காரணமாக பெரியார்நகர் அரசு ஆஸ்பத்திரியில் லேசான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கால் வீக்கம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் 15-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த குற்றத்துக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரி எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.பால்ராம் சங்கர், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் ஆகிய இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

டாக்டர்களிடம் போலீசார் விசாரணை

இந்த விவகாரம் குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட 2 பேரிடமும் மருத்துவரீதியான விசாரணை கடந்த வாரம் முடிந்தது. இந்த நிலையில் டாக்டர்களிடம் நேற்று காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி ஏற்கனவே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் பரிந்துரைத்த கேள்விகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த விசாரணையை போலீசார் முன்னெடுத்தனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த விசாரணை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அந்த வீடியோ பதிவு ஆதாரம் பிளாஸ்டிக் கவரில் மூடி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது, இந்த வீடியோ ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்