ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு 150 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

Update: 2023-02-11 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பயண வழி ஓட்டல்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், பிரசாத், பத்மநாபன், ஸ்டாலின் ராஜரத்தினம் மற்றும் கதிரவன் ஆகியோரை கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பஸ் நிறுத்த பயணியர் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது சமையல் கூடம் சுகாதாரமின்றி காணப்பட்ட 2 ஓட்டல்களுக்கு முன்னேற்ற அறிக்கை வழங்கி அவற்றை தற்காலிகமாக மூடவும், குறைகளை சரி செய்த பின் மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றாத 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்களில் மீதமுள்ள வெஜிடபிள் பிரியாணி, காலாவதியான பால் பாக்கெட்டுகள், கிரீம் கேக் மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத பாதாம் பால், சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள் ஆகிய சுமார் 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் குறைகளை சுட்டி காட்டி 7 ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி 15 நாட்களுக்குள் குறைகளை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் சட்டபடியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்